ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்ள இந்த பதிவை எழுதுகிறேன் .
எழுத்தின் மீது எனக்கிருந்த அசைக்க முடியாத காதலின் வெளிப்பாடாக என்னுடைய வார்த்தைகளை கவிதைகளாக தொகுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் கடந்த 2012 ம் ஆண்டு நவம்பர் மாதம்
"மௌனத்தின் இரைச்சல் " என்ற தலைப்பில் என் கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்பட்டது இந்த வெளியீட்டில் என்னுடைய தோழி அகிலாவின் "சின்ன சின்ன சிதறல் " கவிதை நூலும் நண்பர் ஜீவா அவர்களின் " கோவை நேரம் என்ற பயண கட்டுரை நூலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .என்னுடைய தொகுப்பு முழுவதும் பல்வேறு சூழலில் எனக்குள் எழுந்த பல உணர்வுகளை மையபடுத்தி எழுதியிருக்கிறேன் .தாய்மொழியின் மீது கொண்ட காதல் ,நம் பண்பாடு , கலாசாரம், மூடநம்பிக்கை ,தனிமனிதனின் வேதனை அவமானம் ,கோபம்,மகிழ்ச்சி ,ஆவேசம் ,காதல், காமம் என்று பல்வேறு இரைச்சல்களை வெளிப்படுத்தியிருகிறேன் .
அதன் பின் அந்த புத்தகத்தை விற்பனை செய்வதற்காக பதிப்பகங்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ள புத்தகங்களை நூலகங்களுக்கும் ,தோழிகள் நண்பர்கள் அறிவுரைபடி சில விருதுகளுக்கும் அனுப்பி வைத்தேன் அதற்கு காரணம் அந்த விருது வழங்கும் தேர்வு குழுவினராவது அவசியம் படிப்பார்கள் என்ற ஒரு நப்பாசை .
அதன் பின் என்னுடைய அடுத்தகட்ட புத்தகத்திற்கான பணியில் ஆயத்தாமாகிவிட்டேன் அந்த புத்தகத்தின் பெயர் " காதலின் சாரல் " இந்நூல் கோவை விஜயா பதிப்பகத்தால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது .முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் அகம் சார்ந்த காதல் உணர்வுகளால் நிரம்பி வழியும் இந்த நூலின் விலை 30 ரூபாய் தான் .படிப்பவர்கள் நிச்சயம் காதல் உணர்வுகளை கடக்காமல் வெளிவர முடியாது .இந்த நூலை பற்றிய விமர்சனத்தை மரியாதைக்குரிய நண்பர் பாலா அவர்களின்
"மின்னல் வரிகள்" தளத்தில் பார்க்கலாம் .
இதற்கிடையில் கடந்த மாதம் திருப்பூர் அரிமா சங்கம் என்னுடைய "மௌனத்தின் இரைச்சல் " என்ற நூலை
"சக்தி விருதிற்காக "தேர்வு செய்து விருதையும் வழங்கியது . இந்த விருது என் எழுத்திற்கான அங்கீகாரமாக இருப்பதோடு தகுந்த காலத்தில் ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும் மிகச் சிறப்பான பணியையும் செய்திருந்தார்கள் .சமகால எழுத்தாளர்களுக்கும் ,குறும்பட இயக்குனர்களுக்கும் விருதை வழங்கி அவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் பணியை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் .
மேலும் திருப்பூரில் தொழிற்களம் நடத்திய :உறவோடு உறவாடுவோம் என்ற கருத்தரங்க நிகழ்ச்சியில்
"தமிழ் என் அடையாலாம் "என்ற தலைப்பில் நான் பேசினேன் இந்த நிகழ்விற்கு மதுரை மாவட்டத்தில் முன்னாள் ஆட்சியாளர் திரு. சகாயம் அவர்கள்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து பல பட்டிமன்றங்களுக்கும் ,கவி மன்றங்களுக்கும் அழைப்பு வந்தாலும் என் பணி சூழல் மற்றும் ஆய்வு பணி காரணமாக என்னால் வெளியூர்களுக்கு செல்லமுடியாத காரணத்தால் அந்த வாய்ப்புகளை தவிர்த்துவந்தேன்.அப்படி இருந்தும் சில நிகழ்சிகளில் கலந்துகொள்வதை தவிர்க்க முடியவில்லை காரணம் அது மாணவர்களுக்கான நிகழ்வாகவும் ,பெண்களுக்கான நிகழ்வாகவும் இருப்பதால் .கடந்த மாதம் அப்படி ஒரு திடீர் அழைப்பு
"பிறருக்கு உதவுவோம் "என்ற தன்னார்வ தொண்டு நடத்தும் மாணவர்களுக்கான இலவச புத்தகங்களும் புத்தக பைகளும் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு கல்வியின் சிறப்பை பற்றியும் ,தமிழின் சிறப்பையும் பற்றியும் பேசினேன் .
அதற்கடுத்த தினங்களிலே கோவை அரிமா சங்கத்தினர் நடத்திய ஒரு விழாவில் "தொண்டும் தோழமையும் " என்ற தலைப்பில் இன்றைய சமூகத்தின் சிக்கல்களை மையப்படுத்தி நட்பின் தேவையைப் பற்றி பேசினேன் .
![]()
அந்த மகிழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் செய்து ஆசிரியர் திரு .மீனாட்சி சுந்தரம் அவர்கள் என்னுடைய அலைபேசியில் தொடர்புகொண்டு என் புத்தகம் குறித்து பேசினார் .உங்களோடு ஒரு நேர்காணல் மூலம் உங்களை பற்றியும் உங்கள் புத்தகங்களை பற்றியும் அறிந்துகொள்ள நினைக்கிறேன் என்றும் அந்த நேர்காணல் வெள்ளி கிழமை சிட்டி எக்ஸ்ப்ரஸில் வெளிவரும் என்று சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாலும் நேரம் இல்லாத காரணத்தால் இரண்டு நாள் கழித்து அவரோடு தொடர்புகொண்டு பேசினேன் .முதலில் அவரை பற்றிய அறிமுகம் செய்து கொண்டார் தானும் ஒரு படைப்பாளி என்றும் இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதாகவும் சொன்னார் .அதன் பின் என் கவிதைகளில் சில வரிகளை சொல்லி அதை ஒரு வாசகனாக ரசித்ததாக சொன்னார் .
அதன் பின் கேள்வி கணைகளை என்மீது தொடுத்தார் பல சிக்கலான கேள்விகளை முன் வைத்தார் அவற்றிற்கான பதில்களை நான் என்னுடைய பார்வையில் காட்சி படுத்தினேன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பல கேள்விகளும் கருத்து விவாதங்களுமாக நிமிடங்கள் கடந்து போனது .அவரிடம் பேசிய அந்த நிமிடங்களில் அவரின் அசாத்திய அறிவு என்னை பிரமிக்க வைத்தது பல தளங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார் ,அனுபவசாலியும் கூட ஆங்கில உச்சரிப்பு மிக நேர்த்தியாக இருந்தது தமிழில் பேசும்போது அதே நேர்த்தி. அதன் பின் நேர்காணல் முடிவடைந்தது .
நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதாளின் சிறப்பு பக்கமாக வெளிவந்த சிட்டி எக்ஸ்ப்ரஸில் என்னுடைய நேர்காணல் புகைப்படத்துடன் வெளிவந்திருகிறது அது குறித்து நண்பர்
கோவை நேரம் ஜீவா நேற்றே பதிவு செய்திருக்கிறார்.
இந்த நகர்வு எனக்குள் பெரும் சப்தத்துடன் கூடிய அலைகளை பிரசவித்துக்கொண்டே இருக்கிறது .அதன் துள்ளலிலும் துடிப்பிலும் நான் கட்டுண்டு கிடக்கிறேன் .இந்த மகிழ்ச்சி நான் வலைதளத்திற்கு வந்தபின் இரட்டிப்பாகி இருக்கிறது காரணம் இந்த வலையுலக நண்பர்களின் பின்னூட்டங்களும் ,கருத்துகளும் என் எழுத்தை மேலும் வளப்படுத்திக் கொண்டிருகிறது ஆகையால் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிருவதில் எனக்கு இரட்டிப்பு இன்பம் .
இந்த பதிவை எழுத காரணம் எழுத்தின் மீது என்னுடைய தேடுதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை சொல்லுவதற்காகத்தான் மேலும் குடும்பம் ,சமூகம் ,அலுவலகம் என்று பல்வேறு கட்டமைப்புகளுக்குள் நாம் நம் இருப்பை பதிவு செய்து கொண்டிருந்தாலும் அதை தாண்டி புத்தக வாசிப்பிலும் அதை மற்றவர்களுக்கு சொல்லுவதிலும் இருக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் .
" தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனை தூறும் அறிவு."
என்பதை போல நாமும் நம் அறிவை மற்றவர்களோடு பகிர வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்